ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் நீர் வரத்தால் திடீர் வெள்ளப்பெருக்கு
வன பகுதியில் ஆங்காங்கே கன மழை பெய்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுளவில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த இரண்டு மாதமாக 500 கன அடி முதல் 1000 கன அடி வரை மாறி மாறி குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவிலும் தற்போது நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. கோடை விடுமுறை என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.