மகனை கடித்த பாம்பை பிடித்து தண்ணீர் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்த தாயால் பரபரப்பு!
போச்சம்பள்ளி அருகே குப்பை கொட்ட போன இடத்தில், பாம்பு கடிபட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மகனை கடித்த பாம்பை தண்ணீர் பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பூவரசன். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ள விவசாய தொழிலை பார்த்து வந்த இவர் வீட்டின் மாட்டு தொழுவத்தில் உள்ள மாட்டு சாணம் மற்றும் குப்பைகளை அள்ளி கூடையில் கொண்டு சென்று வீட்டில் அருகாமையில் உள்ள குப்பையில் கொட்டியுள்ளார் அப்பொழுது குப்பையில் மறைந்திருந்த பாம்பு பூவரசனை கடித்துள்ளது. இதில் அலறி துடித்த பூவரசன் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது பாம்பு அவரை கடித்துவிட்டு குப்பையின் அருகே ஊர்ந்து சென்றுள்ளது. அதனை லாபமாக பிடித்த அப்பகுதி மக்கள் அந்த பாம்பினை வாட்டர் பாட்டிலில் அடைத்து வைத்தனர்.
பின்னர் பாம்பு கடித்த பூவரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்பொழுது அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவருக்கு வேண்டிய முதலுதவி மருத்துவ சிகிச்சைகள் அளித்து ரத்தம் பரிசோதனைக்காக எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பூவரசனை கடித்த பாம்பினை அவரது தாயார் கோமதி தண்ணீர் பாட்டிலில் அடைத்து அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து வந்தார். வாட்டர் பாட்டிலில் பாம்பு இருப்பதைக் காண மருத்துவமனையில் இருந்த மக்கள் திரண்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.