எச்.ஐ.வி பாதித்த குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்க காரை விற்ற பிரபல யூடியூபர்
பிரபல யூடியூபர் ஆரிப் தனது சொந்த காரை விற்று அதில் கிடைத்த பணத்தை பயன்படுத்தி எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுத்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பிரபல யூடியூபரான ஆரிப் ரஹ்மான், ஆரிப் மைன்ட் வாய்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். வெகுலித்தனமான இவரது நடிப்புக்கும், வீடியோகளுக்கும் தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் யூடியூபர் ஆரிப் ரஹ்மான் அண்மையில் வாங்கிய தனது காரை விற்று அதில் கிடைத்த பணத்தில், ஈரோடு அரசு மருத்துவமனையில் HIV தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அடுத்த கட்டமாக அரசின் அனுமதியுடன் இந்த குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தகைய குழந்தைகளை சமூகத்தில் புறக்கணிக்காமல் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புத்தாடை பரிசளித்த ஆரிஃப் ரஹ்மானை அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.