ஊருக்குள் புகுந்து கடையில் இருந்த வாழைத்தாரை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை ஊருக்குள் நுழைந்து கடையில் இருந்த வாழைத்தாரை தும்பிக்கையால் எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

First Published Aug 4, 2023, 10:34 AM IST | Last Updated Aug 4, 2023, 10:34 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நடமாடுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையே முன்தினம் இரவு ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஆசனூர் காவல் நிலையம் அருகே சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது. 

யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் ரோந்து வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த காட்டு யானை சாலையோரம் இருந்த ஒரு கடைக்குள் புகுந்து தனது தும்பிக்கையால் கடைக்குள் இருந்த ஒரு வாழைத்தாரை தூக்கியபடி சென்றது. ஊருக்குள் நடமாடிய காட்டு யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டிச் சென்றனர். காட்டு யானை கடைக்குள் புகுந்து தும்பிக்கையால் வாழைத்தாரை தூக்கிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.