Watch : பண்ணாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா! விமர்சையாக நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழைவையொட்டி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலின் பங்குனி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் திருவிழாவில் தீ மிதித்து அம்மனை வழிபடுவர்.
இந்த குண்டம் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த வகையில் இன்று அதிகாலை குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றப்பட்டு அம்மன் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலின் பாரம்பரிய பூசாரி அம்மன் வைக்கப்பட்டுள்ள சப்பரத்தை ஏந்தியவாறு முதல் நபராக குண்டம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள்
உள்ளிட்டோர் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.
இதனை அடுத்து நேர்த்திக்கடன் செலுத்தவேண்டிய பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்து வயது குழந்தை முதல் பெண்கள், முதியவர்கள், காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் உட்பட லட்சக்கணக்கானோர் குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இத் திருவிழாவை முன்னிட்டு இன்று முழுவதும் கர்நாடக மாநிலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் அனுமதிக்கப்படாமல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
திருவிழா முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபடுவர்.