தாளவாடியில் பகல்நேரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பகல்நேரத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தாளவாடி மலை பகுதி கிராமத்தில் யானைகள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள பைனபுரம் கிராமத்தில் யானைகள் கூட்டமாக சென்றன. இதை கண்ட அப்பகுதி மக்கள் கத்தி கூச்சலிட்டு யானைகளை விரட்டி அடித்தனர். தாளவாடி சுத்தியுள்ள பகுதிகளில் யானைகள் பகல்நேரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வந்ததால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த காட்டு யானைக் கூட்டத்தை தாளவாடி வனத்துறையினர் மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.