லாரியில் வழிப்பறி செய்து கரும்புகளை ருசிபார்த்த காட்டு யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியை வழிமறித்த காட்டு யானை, லாரியில் வைக்கப்பட்டிருந்த கரும்புகளை ருசி பார்த்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் யானை லாரியில் அடுக்கி வைத்து இருந்த கரும்புகளை தும்பிக்கையால எடுத்து தின்னத் தொடங்கியது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆனால் யானையோ எதையும் கண்டுகொள்ளாமல் கரும்பை பிடுங்கி தின்பதிலேயே குறியாக இருந்தது. மற்ற வாகன ஓட்டிகள் சத்தம் போட்டதால் யானை அங்கிருந்து சென்றது.
இதைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வழக்கம் போல் சிலர் இந்த காட்சியை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக ஒற்றை யானை வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தேடுவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து வருகின்றனர். வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.