Asianet News TamilAsianet News Tamil

வணிகர்களின் போராட்டத்தால் வெறிச்சோடிய பழனி மலை அடிவாரம்; பக்தர்கள் திணறல்

பழனி கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மலை அடிவாரத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி வருகிறது. மேலும் கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது, கிரிவலப்பாதையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் செயல்படவும் அனுமதிக்க கூடாது  என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதைத்தொடர்ந்து  கிரிவல பாதையில் வாகனங்கள் நுழையக்கூடிய சாலைகளில் தடுப்புகள் வைத்து கோவில் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இதன்  காரணமாக கிரிவலப் பாதையில் சொந்த வீடுகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும், கடைகளுக்கும் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கிரிவலப் பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையடிவாரத்தில் பஞ்சாமிர்த கடைகள், விளையாட்டு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், உணவங்கள், தேனீர் கடைகள்  அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடிவாரப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Video Top Stories