மது போதையில் தமிழ் புலிகள் கட்சியினர் சாலையில் அலப்பறை; பொதுமக்களுக்கு இடையூறு செய்து அராஜகம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாமக்கலில் இன்று தமிழ் புலிகள் கட்சி நடத்தும் மாநில உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாகனங்கள் மூலம் மாநாட்டிற்கு செல்கின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வேன் மூலம் மாநாட்டிற்கு செல்ல வேடசந்தூர் ஆத்திமேடு பகுதியில் ஒருங்கிணைந்தனர்.
அதில் சில இளைஞர்கள் மது போதையில் சாலையின் நடுவே கட்சிக்கொடியுடன் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அலப்பறை செய்து பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு செய்தனர். அதன் பின்னர் பேரணியாக மார்க்கெட் சாலைக்கு சென்று அங்கு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அங்கிருந்து மீண்டும் இளைஞர்கள் சாலையை வழி மறித்தவாறு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி ஆத்துமேடுக்கு சென்றனர்.
அப்போது அவ்வழியாக பயணிகளை ஏற்றி வந்த ஒரு தனியார் பேருந்தை வழி மறித்து இளைஞர்கள் பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்துமேடு நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைக்கண்ட அவ்வழியாக சென்ற போலீசார் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தி மாநாட்டிற்கு செல்ல அறிவுறுத்தி வேனில் ஏற்றி அனுப்பி வைத்தார். மேலும் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.