பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; காவல் ஆய்வாளர் அதிரடி நீக்கம்

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் ஆய்வாளர் வீரகாந்தியை பணி நீக்கம் செய்து திண்டுக்கல்‌ சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

First Published Feb 10, 2023, 6:58 PM IST | Last Updated Feb 10, 2023, 6:58 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இங்குள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர்‌ மாதம் கீரனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் வீரகாந்தி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வீரகாந்தி மீது 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பியாக பணிபுரிந்த லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி, பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கியது. இதில் புகார் கொடுத்த பெண், காவல் நிலையத்தில் பணிபுரிந்த சக காவலர்கள் மற்றும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆய்வாளர் வீரகாந்தி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பெண் காவலர் கொடுத்த ஆதாரம், காவல் ஆய்வாளர்  வீரகாந்தியின் செல்போன் உரையாடல் மற்றும் குறுந்தகவல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அப்போதைய ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையிலான  விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான அறிக்கையை விசாகா கமிட்டி அரசுக்கு அனுப்பி வைத்தது.

அறிக்கையின் அடிப்படையில்  காவல் ஆய்வாளர் வீரகாந்தியை  பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் சரக டிஐஜி.அபிநவ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்துவரும் நிலையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Video Top Stories