பழனியில் மங்கள இசைக்கு மீண்டும் அனுமதி; நாதஸ்வரம் வாசித்து நன்றி தெரிவித்த கலைஞர்கள்
பழனி கோவிலில் நாதஸ்வரம் இசைக் கருவிகள் இசைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாதஸ்வரக் கலைஞர்கள் முருகன் பாடலை இசைத்து நன்றி தெரிவித்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 5ம் தேதி கரூர் மாவட்டம் தோகை மலையைச் சேர்ந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு நாதஸ்வர இசைக்கருவிகளுடன் படிப்பாதையில் சென்றபோது பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் நாதஸ்வரம், தவில் இசைத்து மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதித்திருப்பதாக கூறினர். இதனால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முறையிட்ட நாதஸ்வர கலைஞர்களுக்கும், கோவில் உதவி ஆணையர் லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே கோவில் நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் தவில், நாதஸ்வரம் இசை கருவிகள் மங்கள இசை உடன் மட்டும் வாசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதனை அடுத்து நாதஸ்வர கலைஞர்கள் திருக்கோவில் தலைமை அலுவலகம் முன்பாக முருகன் பாடலை இசைத்து கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.