மலை கிராம மாணவர்களுக்காக பாட்டு பாடி, டான்ஸ் ஆடி கற்பிக்கும் ஆசிரியர்; வைரலாகும் வீடியோ
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர் ஒருவர் பாட்டு பாடியும், நடனம் ஆடியும் பாடம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலை பகுதியில் அமைந்துள்ளது கொங்கப்பட்டி கிராமம். இங்குள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆசிரியர் ஜெயக்குமார் என்பவர் தாளமிட்டு பாட்டு பாடி மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் வீடியோ தற்போது சமூகம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிரியர் ஜெயக்குமார் ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கைகளாக மாணவர்கள் எளிதில் புரிந்து அறிந்து கொள்ளும் விதம் வில்லுப்பாட்டு வடிவில் மெட்டு அமைத்து மாணவர்களுக்கு பாடலாக சொல்லித் தருகிறார். மாணவர்கள் அதனை கற்றுக் கொள்ளும் போது அருகில் இருக்கும் மேஜையை இசைக்கருவியாக மாற்றி ராகத்திற்கு ஏற்றவாறு தாளம் போட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி பாடம் கற்றுக் கொள்ள வைக்கிறார்.
ஆசிரியரின் இந்த செயலுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.