பழனியில் காலாவதியான பஞ்சாமிர்த விற்பனை? அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து எஸ்கேப்பான வியாபாரிகள்
பழனி முருகன் கோவில் வளாகத்தில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தின் தரம் குறித்து எழுந்த சர்ச்சையால் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்தம் காலாவதி தேதி முடிந்தும் விற்பனை செய்யப்படுவதாகவும், கோவில் நிர்வாகத்தால் விற்கப்படும் லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதால் பூசனம் பிடித்து, எண்ணெய் சிக்கு வாடை அடித்தும் இருந்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையில் 7-க்கும் மேற்பட்டோர் பஞ்சாமிரத தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு சில பிரசாதங்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனிடையே கோவில் நிர்வாக அறங்காவலர் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பின் போது, கோவில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டு இருந்த தேதியை 15 நாட்களில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். அதேபோல லட்டு, முறுக்கு, அதிரசம் ஆகிய பிராசதங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி விரைவில் குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்லதுரை ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே அதிகாரிகள் ஆய்வு செய்வதை அறிந்த வியாபாரிகள் பலர் கடைகளை அடைத்துவிட்டு சென்றதால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.