ஹாரன் அடிச்சா வழிவிட முடியாதா? செம்பட்டியில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பரபரப்பு

செம்பட்டி பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

First Published Feb 6, 2024, 12:44 PM IST | Last Updated Feb 6, 2024, 12:44 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து ஒரே நேரத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செம்பட்டி வழியாக, மதுரைக்கு புறப்பட்டன. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக, பழனியில் இருந்து செம்பட்டி நோக்கி வந்து கொண்டியிருந்தது. அப்போது, எஸ்.பாறைப்பட்டி அருகே, முன்னாள் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர்,  தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த, அரசு பேருந்துக்கு விலகிச் செல்ல வழி விடவில்லை என கூறப்படுகிறது. 

இதில், தனியார் பேருந்தை அரசு பேருந்து முந்தி செல்ல முயன்ற போது, விபத்து ஏற்படும் சூழல் உருவானதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், அதிவேகமாக செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு பேருந்தை, இரவு சுமார் 8.30 மணி அளவில் ஓட்டி வந்தார். அதே நேரத்தில் தனியார் பேருந்தும் செம்பட்டி பேருந்து நிலையம் வந்தடைந்தது. அப்போது, ஆத்திரம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர், இரும்பு குழாயால் தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்க முயற்சி செய்தார். 

அப்போது, இரண்டு பேருந்து ஓட்டுனர்களும் ஒருவருக்கு ஒருவர், தகாத வார்த்தைகளால் பேசினர். இதில், சமாதானம் செய்ய முயன்ற,  அரசு பேருந்து நடத்துனரை, தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும், இரும்பு கம்பி மற்றும் இரும்பு பைப்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயற்சித்தனர். இதனால், செம்பட்டி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பேருந்தை கிளம்பிச் செல்ல விடாமல், அரசு பேருந்தை எதிரே நிறுத்திக் கொண்டனர். 

இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் தகாத ஆபாச வார்த்தைகளை பேசினர். இதனால் பயணிகள் முகம் சுளித்தனர்.  ஓட்டுநர்களின் மோதலால் இரண்டு பேருந்துகளில் இருந்த பயணிகள், பெரும் அச்சம் அடைந்தனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இப்பிரச்சினையால், செம்பட்டி பேருந்து நிலையத்தில் சுமார், 20 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.