Watch : பழனி அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம்! இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து அவதி!

பழனி அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழியில் இருசக்கரவாகனத்தில் சென்றவர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழியில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டனர்.
 

Share this Video

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அதிக அளவு போக்குவரத்து உள்ள பகுதியாக உள்ளது. இந்நிலையில் ஆயக்குடியில் இருந்து வரதாபட்டினம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கியது.

இதற்காக ஏழு இடங்களில் பாலம் அமைப்பதற்காக 15அடி ஆழம், 10அடி அகலத்திற்கு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் சாலையோர மின் விளக்குகள் இல்லாததால் குழியில் விழுந்து விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சாலைப் பணிகள் நடப்பது குறித்த அறிவிப்பு பலகைகளை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் முறையாக வைக்காமல், ஒப்பந்ததாரர்கள் சாலையோரத்தில் வீசி எரிந்துள்ளனர். ஒப்பந்ததாரரின் பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணிகள் நடைபெறும் பகுதிக்கு வருவதேயில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பாப்பம்பட்டியை சேர்ந்த ஆடு வியாபாரி மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் தோண்டி வைக்கப்பட்ட குழியில் விழுந்து விபத்துக்குள்ளானார். விபத்தில் சிக்கியவரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் குழியில் விழுந்த நபரை மீட்டனர். விபத்தில் சிக்கியவர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்கள் ஏற்பட்டது. பெரும் விபத்து நிகழ்வதற்கு முன்பு பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Video