முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு புதிய பேருந்து இயக்கப்பட்டதை பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் வரவேற்றனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10ம் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவதற்கும் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சார்ந்த மலைவாழ் மக்கள் அரசுக்கு புதிய வழித்தடம் மற்றும் பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கத்தை போதகாடு பகுதியில் இருந்து பையர்நத்தம். பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை பேருந்தின் முதல் சேவையை பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் கொண்டாடினர்.