தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு
தருமபுரி மாவட்டத்தில் நில அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூதாட்டி தீக்குளிக்க முயற்சித்த நிலையில், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காளி பேட்டையில், 41 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அந்த இடம் தனக்கு சொந்தமானது என அதே பகுதியைச் சேர்ந்த சீதாராமன் மகன் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலத்தினை அளவீடு செய்ய பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் மனு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு பாப்பிரெட்டிப்பட்டி குறு வட்ட நில அளவர் நேசமணி, வி.ஏ.ஓ., கார்த்திகேயன் நில அளவை பணியில் ஈடுபட்டனர். அப்போது நில அளவை செய்யகூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் ராதா என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நில அளவீடு பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வி.ஏ.ஓ., கார்த்திகேயன் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் சிவக்குமார், சபரீஸ்வரன் உள்பட 12 பேர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.