திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பேருந்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

First Published Nov 29, 2023, 11:26 AM IST | Last Updated Nov 29, 2023, 11:26 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் சொகுசுப் பேருந்து பெங்களூருவில் இறக்கி விட்டு விட்டு மீண்டும்  தருமபுரி வழியாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் அப்துல் அமீது, அலிஅக்பூர் ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். 

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென கரும்புகையுடன் திடிரென தீ பற்றி எரிவதை அறிந்த ஓட்டுநர்கள் இருவரும் உடனடியாக பேருந்தை சாலையில் நிறுத்தி விட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பியுள்ளனர். சிறிது நேரத்திற்குள் பேருந்து முழுவதும் தீ மள மளவென பற்றி  எரிந்தது. தகவலறிந்து தருமபுரியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரண்டு தீயணைப்பு வாகனங்ள் தண்ணீரை பீய்ச்சி  அடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயி்ர்ச்சேதமோ ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சாலையின் இரு புறமும் இணைப்பு  சாலைகள் இருந்ததால்  பெரிதாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது

பேருந்திலிருந்த ஏ சி அல்லது, இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணத்தினால் தீ பிடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.