Asianet News TamilAsianet News Tamil

உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை

தருமபுரியில் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் உண்டியல் அண்மையில எண்ணப்பட்ட நிலையில், அதில் பக்தர் ஒருவர் தனக்கு இருக்கும் கடன் விவரத்தை குறிப்பிட்டு கடவுளுக்கு கோரிக்கை கடிதம் எழுதியது வைரலாகி வருகிறது.

First Published Feb 16, 2024, 1:20 PM IST | Last Updated Feb 16, 2024, 1:20 PM IST

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா முடிந்த பிறகு ஆண்டுதோறும்  உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற்ற நிலையில்  உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்  சங்கர், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள்  முன்னிலையில் கோவில் வளாகத்தில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

பலத்த பாதுகாப்புடன் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் உண்டியலில் இருந்த ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.2,21,777 ரொக்க பணம் மற்றும் சில்லறை காசுகள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தன. மேலும் 4 கிராம் 200 மில்லி தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது. இவை அனைத்தும் கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில், உண்டியலில் வெள்ளைத்தாள் ஒன்று இருந்துள்ளது. அதை உண்டியல் எண்ணுபவர்கள் பிரித்து படித்துள்ளனர். அந்த வெள்ளைத் தாளில்  கடன் பிரச்சனையை தீர்க்க முருகனுக்கு பக்தர் ஒருவர் கடிதம்  எழுதி இருப்பது தெரிய வந்தது. அதில் கடன் பிரச்சினையை தீர்க்க கந்த சஷ்டி கவசத்தில் உள்ள வரிகளை குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். 

அதில் யார் யாருக்கு?  எவ்வளவு கடன் தர வேண்டும். நகை கடன், சங்க கடன், வீட்டுக் கடன் எவ்வளவு தொகை என தனித்தனியாக தொகை எழுதி உள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் கடன் பிரச்சனையை தீர்த்து வை முருகா என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தனக்கு ஒருவர் ரூ. 10 லட்சம்  தர வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை எழுதியவர் யார் என்ற விவரம் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த கோவில் பணியாளர்கள் பக்தரின் கோரிக்கையை நிறைவேற்றித் தா முருகா என்று வேண்டிக் கொண்டனர்.

Video Top Stories