காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனின் பெற்றோரை சரமாரியாக தாக்கிய காதலியின் உறவினர்கள் ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பார்த்தசாரதி. அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்நதவர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்த்தசாரதி, சுசித்ரா இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் பார்த்தசாரதி மற்றும் அவரது உறவினர்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அரைகுறை ஆடையுடன் பஞ்சாயத்தில் அமர வைத்து கிராம முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் வீடியோ வைரலான நிலையில் இது குறித்து வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட அண்ணாதுரை மற்றும் அவரது மனைவி பிரேமாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பிரேமா அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமி, கவியரசி, ராமானுஜம் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.