வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்ய ஞான சபையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை இளைஞர்கள் சிலர் தீவிரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடைபெற்றது. ஜோதி தரிசன விழா 6 காலம் நடைபெறும் நிலையில் சுழற்சி முறையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சத்ய ஞான சபை அருகே உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற தலைமை காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு சில இளைஞர்கள் பெண்களை கேலி செய்த நிலையில் அதனை காவலர் ரமேஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ரமேஷை தாக்க துவங்கியுள்ளனர். சீருடையில் இருக்கும் காவலரை சிலர் தாக்குவதை அறிந்த பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சக காவலர்கள் ரமேஷை அவர்களிடம் இருந்து மீட்ட நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலரை சிலர் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.