நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்
விருத்தாசலத்தில் கூண்டில் நின்று சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த, காவல் உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக ஆலடி காவல் உதவி ஆய்வாளர் துரைகண்ணு என்பவர் சாட்சியம் அளிக்க வந்தார். அப்போது நீதியரசர் பிரபாசந்திரன் முன்னிலையில், கூண்டில் நின்றபடி சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த போது, திடீரென காவல் உதவி ஆய்வாளர் கூண்டில் நின்றவாறே மயங்கி கீழே விழுந்தார். இதனால் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்சியம் அளிக்க வந்த உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.