புயல் கோர தாண்டவத்தின் இடையே பிரசவ வலி; பெண் கூலி தொழிலாளிக்கு விரைந்து உதவிய போலீஸ்க்கு குவியும் பாராட்டு
சென்னையில் மிக்ஜாம் புயல் கோர தாண்டவம் ஆடிய நிலையில் பிரசவ வலியால் துடித்த பெண் தொழிலாளிக்கு உதவிய சென்னை போலீஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இன்று ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன, பல்வேறு சுரங்கப்பாதைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு முடக்கப்பட்டது.
இந்நிலையில் மழையின் போது பெண் தொழிலாளி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் உடனடியாக அப்பெண்ணுக்கு மருத்துவ உதவி கிடைக்கு ஏற்பாடு செய்தனர்.
அதன் அடிப்படையில் உடனடியாக ஆம்புரன்ஸ் வரவழைக்கப்பட்டு அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டதில் அழகிய குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக குழந்தையும், தாயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை பெருமையுடன் தெரிவித்துள்ளது. காவல் துறையினரின் செயலை பார்த்து நெகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.