சென்னை உணவகத்தில் உணவு சாப்பிட்ட 6 பேர் வாந்தி, மயக்கம்; அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து காத்திருந்த ஷாக்

சென்னையில் தனியார் உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட 6 நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

First Published Aug 1, 2023, 9:55 AM IST | Last Updated Aug 1, 2023, 9:55 AM IST

சென்னையில் விருதுநகர் அய்யனார் உணவகம் என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது உணவின் ருசியில் மாற்றம் இருப்பதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளனர். 

உணவருந்திய அனைவருக்கும் ஒரே மாதிரியான சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது உணவகத்தில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள் அனைத்தும் அதிகாரிகளை ஒரு நிமிடம் ஆடிப்போகச் செய்தது. அந்த வகையில் சாம்பாரில் பிளாஸ்டிக் கவர் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உணவக உரிமையாளரை வசைபாடத் தொடங்கினர். அதே அறையில் திரும்பி பார்த்த அதிகாரிகள் உணவுப் பொருட்கள் மீது கூட்டம், கூட்டமாக ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை சோதனை செய்த போது அவை அனைத்தும் கெட்டுப்போயிருப்பது தெரியவந்தது. இது போன்ற கெட்டுப்போன பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தியதால் தான் வாடிக்கையாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கடிந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories