Asianet News TamilAsianet News Tamil

காவிரியை மையப்படுத்திய தேர் திருவிழா; மயிலாடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தை போன்று ஆண்டுதோறும் நடைபெறும் துலா உற்சவம் புகழ்பெற்றது. ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் துலா உற்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் இன்று மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை புகழ்பெற்ற துலா உற்சவம் நடைபெறுகின்றது. 

இதில், சிவாலயங்கள் மற்றும் திருஇந்தளுர் ஸ்ரீ பரிமளரெங்கநாதர் ஆகியோர் காவிரிக்கு எழுந்தருளி, அஸ்திரதேவருக்கு பால், பழம், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீபராதனை காண்பிக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுகின்றது. இன்று தேரோட்டத்தில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

Video Top Stories