Asianet News TamilAsianet News Tamil

கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்

குளித்தலை அருகே கடவூரில் கருணாத்ரி நாதர் கோவிலில் மாசி மகத்தினை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூரில் புகழ்பெற்ற ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரிநாதர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோவிலானது கடவூரை சுற்றியுள்ள சுமார் 32 ஊர்களை சேர்ந்த பொது மக்களுக்கு குலதெய்வ கோயிலாகவும், குடிபாட்டு கோயிலாகவும் விளங்கி வருகிறது.

கடவூர் ஜமீன்தாரின் குடும்பத்தினர் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ள கோவிலில் மாசி மகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மாசி மக திருவிழாவில் தினந்தோறும் கருணாத்ரி நாதர் பெருமாள் சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய திருவீதி உலா கண்டார்.

அதனைத் தொடர்ந்து மாசி மக திருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியான இன்று மாலை கருணாத்ரி நாதர் பெருமாள் சுவாமி ஹேமாப்த நாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சிறப்பு அலங்காரத்தில் கர்ணாத்ரிநாதர் பெருமாள் அம்பாளுடன் எழுந்தருளிய மேளதாளங்கள் மங்கல இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேரை பொதுமக்கள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் கடவூரை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Video Top Stories