அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைகளால் அலங்கரிக்கப்பட்ட அனுமன் சிலையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

First Published Jan 11, 2024, 12:26 PM IST | Last Updated Jan 11, 2024, 12:27 PM IST

மார்கழி மாதத்தில் மூலம் நட்சத்திரம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு  ஒரு இலட்சத்து 8 வடைகள் மாலையாக அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்ட்து. 

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படுவர். 

இதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரமும் செய்யப்பட உள்ளது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில் முழுவதும், 2 டன் வண்ண பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.