பழனி; குடமுழுக்கை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து மாலையில், சண்முகர் - வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில் மலை மீது உள்ள மண்டபத்தில் சண்முகர் - வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர்களால் அரங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் எழுந்தருளிய சண்முகர் - வள்ளி தெய்வானைக்கு பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் இருந்து சண்முகர் - வள்ளி, தெய்வானைக்கு அர்ச்சகர்கள் திருமணம் நடத்திவைத்தனர். திருமண வைபோக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகனை தரிசனம் செய்தனர்.