Asianet News TamilAsianet News Tamil

சூறை காற்றில் சாய்ந்த கோவில் மரம்; தாமாக எழுந்து நின்ற அதிசயம்: பக்தர்கள் பரவசம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழையுடன் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதில், பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.

First Published Mar 25, 2023, 4:29 PM IST | Last Updated Mar 25, 2023, 4:29 PM IST

வேப்பங்கநேரி கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் ஆலய வளாகத்தின் முன்புறம் சுமார் 60 ஆண்டு கால பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது. இந்த மரம் சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்தது.

இதையடுத்து, சாய்ந்து கிடந்த அரச மரத்தின் கிளைகளை வெட்டும் பணிகள் தொடங்கின. கிளைகள் முழுவதும் வெட்டி எடுத்தனர். இரவு நேரமானதால் மரத்தின் அடிப்பகுதியை அப்படியே விட்டுச் சென்றனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதிகாலை 4 மணி அளவில் சாய்ந்து கிடந்த அரச மரம் தானாக எழுந்து நின்றுள்ளது. இதை படவேட்டம்மன் கோவிலுக்கு அருகில் பால் பண்ணை வைத்திருக்கும் தினேஷ், அவரது நண்பர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பரவியதும் வேப்பங்கனேரி பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் படவேட்டம்மன் கோவிலுக்கு வந்து அரச மரத்தை வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

எங்களது கிராமத்திற்கு தெய்வம் வந்துவிட்டது என்று கூறி கிராம மக்கள் அரச மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். மரத்தின் கிளைகள் வெட்டி எடுக்கப்பட்டதால் மரத்தின் எடை குறைந்து புவி ஈர்ப்பு சக்தியால் எழுந்து நின்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''கன மழை மற்றும் சூறைக்காற்றால் சாய்ந்த அரச மரம் தானாக எழுந்து நின்றுள்ளது. இதை தெய்வ சக்தியாகவும், ஆன்மீக சக்தியாகவும் பார்க்கிறோம். உலகில் தெய்வம் இருப்பதற்கு என்பதற்கு இதுவே சாட்சி'' என்றனர்.

மேலும் இந்த நிகழ்வை அறிவியல் விஞ்ஞானமாகவும் பார்ப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிளைகள் வெட்டி எடுத்த பிறகு மரத்தின் எடை குறைந்ததால் புவி ஈர்ப்பு சக்தியால் மரம் தானாக எழுந்து நின்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Video Top Stories