Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்

திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு காய்கனி, பழம், இனிப்பு, காரம் மற்றும் வண்ண வண்ண பூ மலர் மாலைகளை கொண்டு பிரம்மாண்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

First Published Jan 16, 2024, 1:02 PM IST | Last Updated Jan 16, 2024, 1:02 PM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதம் இரண்டாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. 

அதேபோன்று திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், கார வகைகள், காய்கனி மற்றும் பழ வகைகளால், வண்ண வண்ண பூ மாலைகள் ஆகியவற்றால் பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனியாக எழுந்தருளி திட்டி வாசல் வழியாக வந்து சூரிய பகவானுக்கு காட்சி அளித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும், சூரிய பகவானையும் ஒருசேர சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலின் கருவறை முதல் 1000 கால் மண்டபம் வரை ஐந்து பிரகாரங்களில் அமைந்துள்ள 5 நந்தி பகவானுக்கு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் காட்சி கொடுத்தார். இதேபோல் இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

இதனையடுத்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் திருக்கோயிலின் நான்கு மாடவீதியில் காலை முதல் மாலை வரை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி காட்சியளிப்பார். இதனைத்தொடர்ந்து மாலை திருவூடல் நிகழ்வு திருவூடல் வீதியில் நடைபெறுகிறது.