கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மகாபிஷேகம்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மகாஅபிஷேகம் நடைபெற்றது.

First Published Oct 28, 2023, 8:59 AM IST | Last Updated Oct 28, 2023, 8:59 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்யபடுகிறது. 

லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்து சமய அறநிலைய துறையினர் மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினர் சார்பில் ஒவ்வொரு வருடமும் அன்னாபிஷேகத்தினை  கடந்த 38 வருடங்களாக செய்துவருகின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து பிரகன்நாயகிக்கும், பிரகதீஸ்வரருக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மகாபிஷேகத்தின் போது திரவிய படி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், எலுமிச்சை சாறு, அனைத்து வகையான பழங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நேற்று நடைபெற்றது. அபிஷேகத்தை காண கங்கைகொண்ட சோழபுரம் உள்பட அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமான பக்தர்கள் மகாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.