பழனி தண்டாயுதபானி கோவிலில் அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வு
பழனி முருகன் கோவிலில் வருகின்ற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், சிலையின் தன்மை குறித்து அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேதமடைந்த கோபுரங்கள், கோபுரத்தில் உள்ள பதுமைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பழனி மலைக்கோவில் மூலவரான நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது மற்றும் கருவறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் குங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனி மலை கோவில் கருவறை மற்றும் நவபாஷாண சிலையை சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஓய்வு பெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையில் பேரூர் மற்றும் சிறவை ஆதீனங்கள், ஸ்தபதிகள், சித்தமருத்துவர்கள், அர்ச்சகர்கள், இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.