விநாயகர் பாடலை கேட்டு ஆனந்த தாண்டவம் ஆடிய கோவில் யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை அங்கு இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞான விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான யானை அழைத்து வரப்பட்டது. இந்த யானை நான்கு கால யாகசாலை பூஜைகள் மற்றும் புனித நீர் எடுத்து வருதல், கும்பாபிஷேகம் ஆகியவற்றில் பங்கேற்றது.
கும்பாபிஷேகத்தில் மேளதாளங்கள் முழங்க இசை மற்றும் மந்திரங்கள் முழங்கப்பட்டபோது யானை அதை தலையாட்டி ரசித்தபடியே இருந்தது. குறிப்பாக கணபதி ராகத்தில் மந்திரங்கள் முழங்கி பாடல் பாடிய போது யானை சுவாரஸ்யமாக தலையை ஆட்டியபடியே ரசித்துக்கொண்டிருந்ததை அங்கிருந்த பக்தர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். தற்போது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.