தைப்பூச திருவிழா; பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியவர்களை மெய் சிலிர்க்க பார்த்த மக்கள்
தைப் பூசத்திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையடிவாரத்தில் மயில் காவடி, மலர் காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து வந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெரிய கிரேன் வாகனத்தில் உடல் முழுவதும் கத்திகளை குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் மலையடிவாரத்தில் கிரிவலம் வந்தனர். அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் வருவதை ஏராளமானோர் கூடி நின்று மெய்சிலிர்க்க பார்த்தனர்.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி 24ம் தேதி மாலையும், தைப்பூச தேரோட்டம் 25ம் தேதி மாலையும், நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாகமும், திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினரும் செய்து வருகின்றனர்.