திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் நடைபெற்ற 99வது தைப்பூச விழாவில் 26 அடி உயர தேரை முதுகில் அலகு குத்தி பக்தர்கள் இழுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில் 99ஆம் ஆண்டு தைப்பூச பால் காவடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பழனியாண்டவருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து சக்தி வேல் ஊர்வலம், பால் காவடி, பக்தர்கள் செக்கிழுத்து எண்ணெய் எடுத்து, மார்பில் மஞ்சள் மிளகாய் இடித்தனர். தொடர்ந்து சக்திவேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்த சக்திவேலுக்கு மாலை அணிவித்தனர். மேலும் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடை எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து 26 அடி உயரமுள்ள முருகர் தேரை முதுகில் அலகு குத்தி இழுத்தும்¸ 16 அடி உயரமான கம்பத்தில் அலகுகுத்தி அந்தரத்தில் செடல் சுற்றியும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர் இரவு முத்து பல்லக்கில் வள்ளி தெய்வானை உடனுறை பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்கரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.