Asianet News TamilAsianet News Tamil

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற தேர் திருவிழா

மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து அரோகரா கோஷம் முழங்க தேரை இழுத்து வழிபாடு நடத்தினர்.

First Published Feb 24, 2024, 10:43 AM IST | Last Updated Feb 24, 2024, 10:43 AM IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவனித் திருவிழா, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா, மாசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கடந்த 14ம் தேதி  கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

திருவிழாவின் முக்கிய விழாக்களான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடைபெற்றது. 7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார் 8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான தேரோட்டம் காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நான்கு வீதிகளிலும் சுற்றி வந்தது, அதனைத் தொடர்ந்து சுவாமி குமர விடங்கப் பெருமான், வள்ளி, தெய்வானை  அம்பாளும் பெரிய தேரில் வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மன் தேர் வலம் வந்தது. வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. இன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.