அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் நடைபெற்ற மண்டல அபிஷேகம் நிறைவு விழா வெகு விமர்சையாக மஹா தெப்போற்சவத்துடன் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், முத்தி தீர்த்த தலம் என முப்பெரும் சிறப்பு பெற்றதுமாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனுரை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி இலட்சக்கணக்கான பக்தர்களின் சிவாய நம கோஷத்துடன் விமரிசையாக நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, ஆகம விதிமுறைகள் படி கால சந்தி, உச்சி காலம் சாயரட்சை என மூன்று கால மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், யாகம், அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு கலசாபிஷேகம், சங்காபிஷேகம், அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.
முன்னதாக மஹா தெப்போற்சவம் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த தேவர் சமூக மண்டப கட்டளைதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் குமரதுரை, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் (பொறுப்பு), அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் ஆகியோரிடம் தங்களுடைய சமூகம் காலம்காலமாக சித்திரை தேர் திருவிழாவின் போது தெப்போற்சவத்தை நடத்தி வருகின்றது. எனவே இந்த தெப்போற்சவத்தையும் நடத்துவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதனை ஏற்று, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேக மஹாதெப்போற்சவம் தேவர் சமூக மண்டப கட்டளை சார்பில் வெகு விமர்சையாக கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. தெப்போற்சவத்தில், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மேலும் மண்டலபூஜை நிறைவு நாளை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தெப்போற்சவ நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் அறங்காவலர் குழு அவிநாசி டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு துறை வீரர்கள் செய்தனர்.