இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருளியல் உள்ள மாநிலம் தமிழ்நாடு… சிங்கப்பூர் அமைச்சர் புகழாரம்!!

இந்திய அளவில் மிகப்பெரிய பொருளியல் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று சிங்கப்பூரின் உள்துறை சட்ட அமைச்சர் சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். 

First Published May 24, 2023, 11:30 PM IST | Last Updated May 24, 2023, 11:30 PM IST

இந்திய அளவில் மிகப்பெரிய பொருளியல் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று சிங்கப்பூரின் உள்துறை சட்ட அமைச்சர் சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகளின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய சிங்கப்பூரின் உள்துறை சட்ட அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரில் குடியேறிய தமிழ்க்குடி நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அர்பணித்துள்ளது. மேலும் தமிழின் மரபு பண்பாடு கலை இலக்கிய வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்த இனம் தமிழினமாகும். பண்பாட்டை மறக்காமல், மரபை தொலைக்காமல், மொழியை இழக்காமல் விழியாக கருதினாலும் வாழும் நாட்டை வளப்படுத்த முதன்மை இடம் தந்ததால் இன்றைக்கும் சிங்கப்பூரின் அரசு மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி வாழ்கிறது, வளர்கிறது.

விமானத்தில், விமான நிலையத்தில், சாலையில், வங்கியில், நீதிமன்றத்தில், நாடாளுமன்றத்தில், வானொலியில், தொலைக்காட்சியில், நாளிதழில், திங்களிதழில், பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் தமிழ் இடம்பெற்றுள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழை வளர்ப்பதில் நமது தமிழாசிரியர்களும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இவர்களில் பல மாணவர்கள் மேற்படிப்பிற்காக தமிழ்நாட்டுக்கு சென்று வருகின்றனர். கல்வித்துறையில் தொடக்க நிலையில் இருந்து பல்கலைக்கழகம் வரை தமிழை படிக்கும் வாய்ப்பு சிங்கப்பூரில் உள்ளது.

சிங்கப்பூரும் தமிழ்நாடு வரலாற்று ரீதியாக வலுவான உறவுகளை கொண்டுள்ளன. சிங்கப்பூரில் 2 லட்சம் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். இது மக்கள் தொகையில் 5 விழுக்காடு. தமிழ்நாட்டு தமிழர்களும் பல துறைகளில் இங்கு பணியாற்றுகிறார்கள். சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்போது 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தற்போது 250 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் தமிழ்நாடு தொடர்ந்து வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. தமிழ்நாடு வளம் மிகுந்த மாநிலம், மிக விரைவில் சிங்கப்பூரை விட தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபி அதிகமாகும் என நான் நம்புகிறேன். இந்திய அளவில் மிகப்பெரிய பொருளியல் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார். 

Video Top Stories