மாணவர்கள் தெளிவா இருக்காங்க; தேவை இல்லாமல் அவர்களை குழப்ப வேண்டாம் - உதயநிதி மீது பிரேமலதா பாய்ச்சல்
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரியில் கூடும் பொதுக்குழுவில் முடிவு செய்வோம் என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் தேமுதிக விஜயகாந்த் தலைமையில் ஜனவரியில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் முடிவு செய்வோம்.
தமிழகத்தில் மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் நிலவுவதால் மாநிலம் முழுவதும் கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்கி, சட்டம், ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும். நீட் தேர்வு இந்தியா முழுவதும் தவிர்க்க முடியாதது என உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பின் மூலம் தெரிவித்துள்ளது.
பிற மாநில மாணவர்களைவிட தமிழக மாணவர்கள் மிகவும் அறிவாளிகள் எனவே, எந்த தேர்வு வைத்தாலும் அதில் தேர்வாகும் திறமை படைத்தவர்கள். எனவே எம்பிபிஎஸ் படிக்க மாணவர்களை நீட் தேர்வுக்கு பெற்றோர் தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.