பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்; மத்திய அரசின் நிதி பகிர்வு குறித்து மக்களுக்கு விளக்கம்

மத்திய அரசு தமிழகத்திற்கு குறைவான நிதியை ஒதுக்கீடு செய்வதை மக்களுக்கு எடுத்துறைக்கும் விதமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து விளக்கம் அளித்தனர்.

First Published Feb 8, 2024, 1:47 PM IST | Last Updated Feb 8, 2024, 1:47 PM IST

மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாகுபாடு காட்டுவதாக தமிழகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன. குறிப்பாக கேரளா மாநில அமைச்சர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மத்திய அரசின் நிதி பங்கீடு கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மத்திய அரசின் நிதி பங்கீடு தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துறைக்கும் விதமாக பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து விளக்கம் அளிக்கும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் நிதிப்பகிர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுமார் 100-கிராம் எடையுள்ள அல்வா பாக்கெட்டுகளை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கினர். 

காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் ஏராளமான திமுகவினர் பயணிகளுக்கு அல்வா கொடுத்து மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்த நிதி பங்கீடு இதுதான் எனவும், மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி தமிழகத்திற்கு குறைவான நிதி அளித்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தெரிவித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முறையான அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்தில் இது போன்று நடந்துகொள்ளக் கூடாது என தெரிவித்தனர். இதனால் திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.