Video : திமுகவில் இணைகிறார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்.? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.!

விரைவில் திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன் ? என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

First Published Sep 23, 2022, 8:04 PM IST | Last Updated Sep 23, 2022, 8:05 PM IST

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற கட்சி குழு தலைவரும், நெல்லை தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சில தினங்களுக்கு முன் நெல்லைக்கு வந்த முதல்வரிடம் இந்த மருத்துவமனை தொடர்பாக கோரிக்கைகளை வைத்தேன். நிகழ்ச்சி முடிந்து முதல்வர் அங்கிருந்த சென்ற சில நிமிடத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் என்னை தொடர்பு கொண்டார். 

விரைவில் நெல்லலை வருகிறேன், அப்போது உங்கள் கோரிக்கை குறித்த உத்தரவை போடுவோம் என்றார். ஒரு செயலை செய்கின்றபோது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும்.  எனவே, அமைச்சர் மற்றும் முதல்வரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று பேசினார். ஏற்கனவே பாஜகவில் சட்டமன்ற குழு தலைவராக இருந்தாலும் கூட நயினார் நாகேந்திரன் பெரிய அளவில் அரசியல் பணி செய்வதில்லை என்ற விமர்சனம் உள்ளது. எனவே அவர் விரைவில் மாற்று கட்சிக்கு செல்லலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும், சமீபகாலமாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் நயினார் நாகேந்திரன் தவறாமல் கலந்து கொள்கிறார். அரசியல் நாகரீகத்தோடு கலந்து கொள்வதாக வைத்து கொண்டாலும் அரசு மேடையில் முதல்வரையும் அரசையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நயினார் நாகேந்திரன் முதல்வரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதேசமயம் பாஜக  தலைமை தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. 

மாநில தலைவர் அண்ணாமலையும் அடுத்தடுத்து ஊழல் புகார்களை வெளியிட்டு வரும் சூழலில் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன். திமுக ஆட்சியை புகழும் சம்பவம் அரசியல் விமர்சகர்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதேபோல் முதல்வரும் தங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் முன்வைத்த கோரிக்கையை காது கொடுத்து வாங்காத நிலையில், எதிர்கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனை தொடர்பாக முன் வைத்த கோரிக்கையை சில நாளில் நிறைவேற்றி கொடுத்துள்ளார். எனவே விரைவில் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணையலாம் என நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.