Oommen Chandy: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார் - மறைவுக்கு காரணம் என்ன?
கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (79) காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி காலமானார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தனர். அவருக்கு வயது 79. இரண்டு முறை கேரள முதல்வராக பதவி வகித்த சாண்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை பெங்களூருவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.
கேரள முன்னாள் முதல்வரின் மரணம் குறித்து அவரது மகன் சாண்டி உம்மன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். "அப்பா காலமானார்", என்று உம்மன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் விரிவாக எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சாண்டி, பெங்களூருவில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
“எங்கள் மிகவும் அன்புக்குரிய தலைவரும் முன்னாள் முதல்வருமான திரு. உம்மன் சாண்டி. கேரளாவின் மிகவும் பிரபலமான மற்றும் ஆற்றல் மிக்க தலைவர்களில் ஒருவரான சாண்டி சார் தலைமுறைகள் மற்றும் மக்கள் பிரிவினரிடையே நேசிக்கப்பட்டார். அவரது தலைமையையும் ஆற்றலையும் காங்கிரஸ் குடும்பம் இழக்க நேரிடும்” என்று கேரள காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. சாண்டியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஒரே ஆண்டில் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதே கட்டத்தில்தான் மாணவர் வாழ்க்கையின் மூலம் அரசியலுக்கு வந்தோம். ஒரே நேரத்தில் பொதுவாழ்க்கையை முன்னெடுத்தோம். அவரிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினம். உம்மன் சாண்டி. திறமையான நிர்வாகியாகவும், மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்" என்றார் பினராயி விஜயன்.
வயோதிகம் காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம், உடல்நிலை மோசமான காரணத்தால் பெங்களூரில் உள்ள அவரின் வீட்டில் இருந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். ஒரு வாரம் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை அவரின் உடல்நிலை மோசமானதால் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு பிற்பகல் மாற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது. மூச்சு விடுவதில் கடும் சிரமம் நிலவியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்.
மக்களின் முதல்வர் டூ சோலார் ஊழல் வரை.. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறுபக்கம்