தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஏழுமலையானை தரிசித்த பிரதமர் நரேந்திர மோடி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி இன்று காலை ஏழுமலையானை வழிபாட்டார்.
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஆந்திரா வந்தடைந்தார். ஆந்திரா வந்த பிரதமருக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் இருந்து கோவில் முன்வாசலுக்கு இன்று காலை வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சம்பிரதாய முறையில் ஆன இஸ்திகாபால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலுக்கு சென்ற பிரதமர் கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றை வழிபட்டு ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் கோவிலில் உள்ள துணை சந்நிதிகளில் வழிபாடு நடத்திய பிரதமருக்கு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார்.