
மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணி!
மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 9ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக "ஏக் தரீக் ஏக் கன்டா ஏக் சாத்" எனப்படும் ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, நாடு முழுவதும் மெகா தூய்மை இயக்கம் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அந்த வகையில், மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தூய்மையே சேவை இயக்கத்தில் தேசம் கவனம் செலுத்துகையில், அங்கித் பையன்புரியாவும் நானும் அதில் ஈடுபட்டோம். தூய்மைக்கு அப்பால், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.” என பதிவிட்டுள்ளார்.