லட்சக்கணக்கான மதிப்பில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்; அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ஆந்திரா மாநிலத்தில் காட்டு யானைக் கூட்டம் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய நிலையில், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி கோட்டா பகுதியில் இருக்கும் தனமயகாரி பள்ளி, கும்மரிமடுகு, மிட்டூரூ, நக்கலப்பள்ளி, மொட்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் இருக்கும் விளை நிலங்களில் நேற்று இரவு புகுந்த 14 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் ஒன்று பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
மேலும் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விட்டன. நேற்று மாலை 7 மணிக்கு காட்டு யானைகள் வயல்வெளிகளில் திரிவதை பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து அவர்களையும் வரவழைத்து காட்டு யானை கூட்டத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவற்றை விரட்ட இயலவில்லை. இன்று காலை அவை தாமாகவே வனப்பகுதிக்கு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்து விட்டதாகவும், காட்டு யானைகளை அட்டகாசம் காரணமாக தங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இழப்புகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த பகுதிக்கு காட்டு யானைகள் மீண்டும் வராத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.