உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து: பதற வைக்கும் வீடியோ காட்சி..!
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத் சுற்றுலா பயணிகளுக்கான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. நல்வாய்ப்பாக அதில் பயணித்த பயணிகள் உயிர் தப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் தத்தளித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கெஸ்ட்ரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. சிர்சி பகுதியில் உள்ள ஹெலிபேடில் இருந்து ஆன்மீக யாத்திரைகளை ஏற்றி கொண்டு கேதர்நாத் பகுதியில் இருக்கக்கூடிய ஹெலிபேடில் தரையிறங்கிய போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க முடியாமல் சுழன்றபடி அருகில் உள்ள பள்ளத்தில் தரையிறங்கியது. நல்வாய்ப்பாக அதில் பயணித்த 7 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.