மதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
கடந்த ஆண்டு புதூர் பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையில் ராஜாவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ராஜா கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
மதுரை புதூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ராமவர்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜா. ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து வருகிறார். இவர் திமுக பிரமுகரும் கூட. இவர் ஜவகர்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் ஆயுதங்களுடன் 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ராஜாவை வழிமறித்தனர். விபரீதம் நிகழ இருப்பதை உணர்ந்த ராஜா அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க நினைத்தார். அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
எனினும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதனைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு புதூர் பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையில் ராஜாவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ராஜா கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.