Watch : சேலை & நகைக் கடைகளில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது!
கடையநல்லூர், சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் உட்பட நான்கு பேரை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலை பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் எதிரில், தனியார் நிறுவனத்தின் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 5-ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், தங்க மோதிரம் கம்மல் வாங்க இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சென்றுள்ளனர். அப்போது கடையில் செயின் மற்றும் கம்மல் மோதிரத்தின் வகைகளை நான்கு பேரும் பார்த்துக் கொண்டிருந்தபோது, 8 கிராம் எடைகொண்ட தங்க மோதிரம் ஒன்று மாயமாகியுள்ளது. சந்தேகமடைந்த கடையின் விற்பனையாளர், கடையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்த பொழுது நான்கு பேரும் நகையை எடுத்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமந்தாபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது இரண்டு பைக்கில் நான்கு பேர்கள் வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கடையநல்லூர் நகைக்கடையில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட நபரும் இந்த நான்கு பேரும் ஒன்று என்பது தெரிய வந்தது. மேலும் நான்கு பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்துள்ளனர்.
நான்கு பேரிடமும் காவல் துறையினர் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியதில் இவர்கள் வாசுதேவநல்லூர் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் 112 கிராம் செயினை திருடியதும், கடையநல்லூர் நகைக்கடையில் 8 கிராம் கம்மலை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த முனியசாமி நாயுடு மகன் ஜெயபால் வயது (61 ), சுந்தரபாண்டியபுரம் ஆனந்தா நகர் மாந்தோப்பு ஸ்கூல் தெருவில் வசிக்கும் கருப்பசாமி மகன் சண்முகராஜ் வயது (40 ), சாயல்குடி அண்ணா நகர் சந்தனம் மனைவி லட்சுமி வயது ( 65), பரமக்குடி அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் சுந்தர் மனைவி சுந்தரி வயது (65) ஆகியோரை கைது செய்து இவர்களிடமிருந்து 120 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.