Asianet News TamilAsianet News Tamil

தளபதி போட்ட தடபுடல் விருந்து... கட்சி கொடி அறிமுக விழாவிற்கு வந்த நிர்வாகிகளுக்கு வயிறு முட்ட உணவளித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக விழாவிற்கு வந்திருந்த நிர்வாகிகளுக்கு தடபுடலாக விருந்தளித்து உள்ளார் நடிகர் விஜய்.

First Published Aug 22, 2024, 1:55 PM IST | Last Updated Aug 22, 2024, 1:55 PM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அந்த கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே அக்கட்சியின் கொடி அறிமுக விழா இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில நடைபெற்றது.

நடிகர் விஜய் இன்று காலை 9.15 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை தந்து, கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடி சிகப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் அடங்கி இருக்கிறது. அதில் போர் யானைகளும், வாகைப் பூவும் இடம்பெற்று இருக்கிறது. கொடியை அறிமுகம் செய்த பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் தளபதி என கத்தி ஆரவாரம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய விஜய், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக அறிவித்தார். அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறிய அவர், அந்த மாநாட்டில் இந்த கொடிக்கு பின்னணியில் இருக்கும் வரலாற்றை வெளியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார். விஜய் கொடியை அறிமுகம் செய்ததை அடுத்து தமிழகமெங்கும் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்கள் பகுதியில் கொடியை ஏற்றி வருகின்றனர்.

இந்த நிலையில். இன்று கொடி அறிமுக விழாவிற்கு வருகை தந்திருந்த கட்சி நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்தும் ஏற்பாடு செய்துள்ளார் விஜய். வந்திருந்த அனைவரும் கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என விஜய் அன்புக்கட்டளையிட்டதை தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் உணவருந்தினர். புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு உணவை பரிமாறினார். அப்போது எடுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.