"கண்ணீரில் கருக்கொண்ட காவியம் வாழை" மாரிசெல்வராஜை நேரில் சென்று வாழ்த்திய திருமாவளவன்!
Vaazhai : கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பிரபல இயக்குனர் மாரி செல்வராஜின் நான்காவது படைப்பான "வாழை" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது.
பிரபல இயக்குனர் ராமனிடம், உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ், தமிழில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். மேலும் அந்த திரைப்படத்தில் வந்த "நான் யார்" மற்றும் "கருப்பி" உள்ளிட்ட பாடல்களை எழுதியதும் மாரி செல்வராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக தமிழில் "கர்ணன்" மற்றும் "மாமன்னன்" உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்த மாரிசெல்வராஜ், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி தனது நான்காவது படைப்பை வெளியிட்டார். "வாழை" என்கின்ற அந்த திரைப்படம் இப்போது மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. திருநெல்வேலியை அடிப்படையாகக் கொண்டு, அங்கு வாழை சுமக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை தத்ரூபமாக சொல்லியுள்ளார் மாரி.
அது மட்டுமல்ல மாரி செல்வராஜின் இளமை பருவத்தில், நடந்த பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இந்த படமாகும். ஒரு வாழைக்குலை சுமக்கும் சிறுவனாக தன்னுடைய வாழ்க்கையை தான், அவர் இந்த படத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் மாரி செல்வராஜூக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மாரியின் வீட்டுக்கே சென்று வாழ்த்தியுள்ளார்.
உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல, வாழ்க்கையே பெருஞ்சுமை தான். கண்ணீரில் கருக்கொண்ட காவியம் இந்த வாழை, அதை நாடே கொண்டாடுகிறது என்று அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.